search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி அதிகாரிகள்"

    தூத்துக்குடி பகுதிகளில் சுகாதார அலுவலர் தலைமையில் நடந்த சோதனையில் 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #PlasticBan

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி மாநகராட்சி கமி‌ஷனர் ஜெயசீலன் பிளாஸ்டிக் இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். கமி‌ஷனர் ஜெயசீலன் உத்தரவின்படி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்திலும் சுகாதார அலுவலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் வடக்கு பகுதி சுகாதார அலுவலர் ஹரிகணேஷ் தலைமையில் நடந்த சோதனையில் 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

    தெற்கு பகுதி மாநகர சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிலோ பிளாஸ்டிக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேற்கு பகுதி மாநகர சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் தலைமையில் நடந்த சோதனையில் 140 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் மாநகர கிழக்கு பகுதி சுகாதார அலுவலர் ராஜசேகர் தலைமையில் பூபாலராயர்புரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 115 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மாநகர சுகாதார அலுவலர்களின் அதிரடி சோதனையால் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.

    மாநகர தெற்கு பகுதியில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து தாங்களாகவே முன் வந்து துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர் இதற்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து மாநகர நான்கு மண்டலங்களிலும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. #PlasticBan

    திருப்பூர் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #PlasticBan
    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பொருட்களை யாராவது பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்களா? என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது பாலித்தீன் மொத்த விற்பனை கடைகளுக்கு சென்று சோதனையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதிகளில் உள்ள சில கடைகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிகஅளவு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின்படி அங்கு விரைந்து சென்ற அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் அங்குள்ள ஒரு மளிகை கடையில் திடீரென சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி சுமார் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது போல பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PlasticBan
    கொசுக்கள் உற்பத்தியானதை தடுக்காத 35 சுகாதார ஆய்வாளர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் குற்ற மெமோ நடவடிக்கை எடுத்துள்ளனர். #Dengu
    சென்னை:

    சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது.

    வடக்கு, சென்ட்ரல், தெற்கு மண்டலத்திற்கு தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் துணை கமி‌ஷனர் (சுகாதாரம்) ஆகியோர் வீடுவீடாக சென்று கொசுக்களை அழிக்கும் பணியில் களம் இறங்கி உள்ளனர்.

    சுகாதார அலுவலர் (எஸ்.ஓ.) சுகாதார ஆய்வாளர் (எஸ்.ஐ) பற்றாக்குறையால் டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

    சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் 200 சுகாதார ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். இது தவிர பிறப்பு, இறப்பு சான்றிதழ் பணிகளை பதிவு செய்ய 32 பேர் ஈடுபடவேண்டும்.

    ஆனால் மொத்தமே 106 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மற்ற இடங்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன. இதனால் 3 வார்டுகளை ஒரு சுகாதார ஆய்வாளர் கவனிக்கின்ற நிலை தற்போது உள்ளது.

    டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த களப்பணியாளர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் நேரம் பாராமல் வேலையில் பயன்படுத்தி வருகின்றனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுகாதார ஆய்வாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறையால் இருக்கின்ற ஊழியர்களை வைத்து நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வார்டுகளை கவனிக்க முடியாமல் திணறுவதால் வீடுகளிலும், பொது இடங்களிலும் கொசுக்கள் உற்பத்தி ஆகிவிடுகின்றன.

    ஒரு இடத்தை ஆய்வு செய்து விட்டு மீண்டும் வருவதற்குள் அதே இடத்தில் கொசுக்கள் முட்டையிடுகின்றன. தொடர்ந்து கண்காணித்து கொசுக்களை அழிக்க தேவையான அளவு ஆய்வாளர்கள் இல்லாததால் டெங்கு பாதிப்பு இன்னும் குறையவில்லை.

    இதற்கிடையில் சுகாதார ஆய்வாளர்களின் தீவிர களப்பணியை தாண்டி கொசுக்கள் உற்பத்தியானதை மண்டல அதிகாரிகள் நேரில் பார்த்து விட்டால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களுக்கு ‘குற்ற மெமோ’ வழங்கப்படுகிறது. கடந்த 2 வாரத்தில் 3 வட்டாரத்திலும் சேர்த்து 35 சுகாதார ஆய்வாளர்கள் மீது இந்த மெமோ நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    தெற்கு மண்டலத்தில் மட்டும் 12 பேர் மீதும் வடக்கு, சென்ட்ரல் மண்டலத்தில் தலா 10 பேர் வீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக குறைபாடுகளை வைத்துக் கொண்டு ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையற்ற செயல் என்றும் நேரம் பாராமல் உழைத்தும் பயன் இல்லை என்றும் சுகாதார ஆய்வாளர்கள் வேதனை அடைகின்றனர்.

    வேலைப்பளு, மெமோ நடவடிக்கை போன்றவற்றால் மனஅழுத்தம் அடைந்துள்ள ஆய்வாளர்கள் கமி‌ஷனர் மற்றும் துணை கமி‌ஷனரை சந்தித்து முறையிட்டனர். தெற்கு மண்டல அதிகாரி தொடர்ந்து குற்றமெமோ வழங்கி வரும் செயல் வேதனை அளிக்கிறது என்றும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடத்தை கண்டுபிடித்து தண்டிக்கும் நோக்கத்தோடு அவர் செயல்படுவதாக முறையிட்டனர்.

    இது குறித்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி கூறியதாவது:-

    தேவையான ஆட்களை நியமித்து வேலைகளை வாங்குவது தான் முறையாகும். 4 வருடமாக காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. இருக்கின்ற ஊழியர்களை வைத்து சமாளிக்கிறோம். எந்த அளவிற்கு களப்பணியாற்ற முடியுமோ அந்த அளவிற்கு இந்த நேரத்தில் வேலை செய்கிறோம். ஆனால் அதையும் மீறி கொசுக்கள் இருப்பதை கண்டு பிடித்து எங்களை தண்டிப்பது வேதனையான செயல். டெங்குவை கட்டுப்படுத்த முதலில் சுகாதார ஆய்வாளர்களை முழுமையாக நியமிக்க வேண்டும். அதை செய்யாமல் தண்டிக்கும் செயலில் ஈடுபடுவது நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது என்றார். #tamilnews
    ×